நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள்... 3 அரசுகள் கவிழ்ப்பு


நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள்... 3 அரசுகள் கவிழ்ப்பு
x

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது 3 அரசுகள் கவிழ்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வரும் வேளையில், கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரபட்ட அனைத்து நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டன அல்லது முடிவடையாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் அரசின் பலத்தை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது 3 அரசுகள் கவிழ்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டது பிரதமர் இந்திரா காந்தியின் அரசு. அவரது அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமராக நீடித்து, இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவரான நேரு ஒரே ஒரு முறை மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளார். 1962 போரில் சீனாவிடம் இந்தியா இழந்த கசப்பான தோல்விக்குப் பிறகு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எனினும் அது தோற்கடிக்கப்பட்டது.

1979-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போதே அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

1990-ல் பிரதமர் வி.பி சிங் தலைமையிலான அரசு, 1997-ல் பிரதமர் தேவகவுடாவின் அரசு மற்றும் 1999-ல் வாஜ்பாயின் அரசு ஆகிய 3 அரசுகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சி அதிகாரத்தை இழந்தன.


Next Story