வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை - நிதிஷ்குமார்


வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை - நிதிஷ்குமார்
x
தினத்தந்தி 27 May 2023 8:30 PM GMT (Updated: 27 May 2023 8:31 PM GMT)

புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

திறப்பு விழா புறக்கணிப்பு

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.ஆனால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மூலம் திறக்காததை கண்டித்து சுமார் 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்கின்றன. இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற திறப்பு விழாவை ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் புறக்கணித்து இருக்கிறது. அத்துடன் இன்று உண்ணாவிரத போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்து உள்ளது.

வரலாற்றை திரிக்க முயற்சி

கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை. நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்களிக்காதவர்கள், வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள்.

நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு நாட்டின் ஜனாதிபதி, மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி ஆகியோர் அழைக்கப்படாதது ஆச்சரியமே.

நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டம் காலையில் நடந்தது. ஆனால் பாட்னாவில் எனக்கு பகலில் வேறு சில நிகழ்வுகள் இருந்தன. எனவே என்னால் டெல்லி செல்ல முடியவில்லை. நிதி ஆயோக் கூட்டம் பிற்பகலில் நடந்திருந்தால் கலந்து கொண்டிருப்பேன். எனக்கு பதிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனுமதி கேட்டு மந்திரிகள், அதிகாரிகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தேன். ஆனால் டெல்லியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே பீகாரில் இருந்து எந்த பிரதிநிதியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம்

2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், 'முதலில் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றனர். தற்போது 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுகிறார்கள். இதற்கான நோக்கம் என்னவென்று எனக்கு தெரியவில்லை' என்று தெரிவித்தார்.

பா.ஜனதாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டம் எப்போது நடைபெறும்? என்ற கேள்விக்கு, 'அது குறித்து பிறகு பேசுவோம்' என கூறினார்.

அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஐக்கிய ஜனதாதள தலைவர் உமேஷ் சிங் குஷ்வாகா, 'நாடாளுமன்ற அமைப்பில் ஒரு முக்கிய அங்கம் ஜனாதிபதி என்பதில் ஐக்கிய ஜனதாதளம் உறுதியாக இருக்கிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, அரசியல் சாசனத்தின் உயர் பதவியில் இருக்கும் நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அவரை மோடி அரசு அழைத்திருக்க வேண்டும்' என தெரிவித்தார்.


Next Story