உத்தவ் ராஜினாமா: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை - மராட்டிய கவர்னர் உத்தரவு


உத்தவ் ராஜினாமா: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை - மராட்டிய கவர்னர் உத்தரவு
x

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களே திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. சிவசேனாவின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கினர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், சட்டப்பேரவையை கூட்டி மராட்டிய அரசு இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று அதிகாலை உத்தரவிட்டார்.

கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை திட்டமிட்டபடி நடத்த கோர்ட்டு அனுமதியளித்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான சிறிது நேரத்தில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரே நேற்று இரவு மாநில கவர்னரிடம் வழங்கினார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டியதில்லை என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மராட்டிய சட்டசபை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னரின் உத்தரவு படி இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை. ஆகையால், இன்று நடைபெறவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படாது என மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே


Next Story