மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்


மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது:  ஜெய்ராம் ரமேஷ்
x
தினத்தந்தி 24 Jan 2024 10:06 AM GMT (Updated: 24 Jan 2024 11:00 AM GMT)

ஆம் ஆத்மி கட்சியும், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டு கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.

பொங்காய்காவன்,

அசாமின் வடக்கு சல்மரா பகுதியில் நடந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று பங்கேற்றார்.

அவர் கூறும்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரசானது ஒரு முக்கிய தூணாக உள்ளது. மம்தா இல்லாமல் இந்தியா கூட்டணியை ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது. மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணி மேற்கு வங்காளத்தில் போட்டியிடும். அதில், அனைவரும் (கூட்டணி கட்சியினர்) பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், பா.ஜ.க.வை மக்களவை தேர்தலில் தோற்கடிப்பது என்பது நம் அனைவரின் முதன்மையான பொறுப்பாகும் என்று மம்தா பானர்ஜி முன்பே கூறியுள்ளார் என்றும் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் அரசியல் ஆலோசகரான கே.சி. தியாகி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, இந்தியா கூட்டணியை வழிநடத்தி செல்வதிலும், தேவையான வலிமையை கூட்டணிக்கு வழங்குவதிலும் இருந்து காங்கிரஸ் படுதோல்வியடைந்து விட்டது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா இன்று கூறினார்.

இதனை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடும் அறிவிப்பை இன்று பிற்பகல் வெளியிட்டு கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதனால், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. இது தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பது வரவுள்ள நாட்களில் தெரிய வரும்.


Next Story