பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை: ஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிருப்தி


பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை: ஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிருப்தி
x

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவரான என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை என்று சி.எம்.இப்ராகிம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து குமாரசாமி பேசி இந்த கூட்டணியை உறுதி செய்திருந்தார்.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை சி.எம்.இப்ராகிம் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்திருப்பது குறித்தும், இந்த விவகாரத்தில் எனது முடிவு என்ன? என்பது பற்றியும் வருகிற 16-ந் தேதி அறிவிப்பேன். அதுவரை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி டெல்லி சென்று கூட்டணி குறித்து பேசி இருக்கிறார். டெல்லி செல்லும் முன்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

மாநில தலைவரான என்னிடம் கூட்டணி குறித்து யாரும் கலந்து பேசவில்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி விவகாரத்தில் டெல்லியில் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பது குறித்தும் இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அதுபற்றி எனக்கு தெரிவிக்கவில்லை.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் சிறுபான்மையின தலைவர்கள், ஜனதாதளம் (எஸ்) கட்சியை விட்டு விலகி விட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. ஏனெனில் யார் கட்சியை விட்டு விலகினாலும், அதற்கான ராஜினாமா கடிதம் மாநில தலைவரான எனக்கு தான் வர வேண்டும். அதுபோன்ற எந்த கடிதமும் வரவில்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் சிறுபான்மையின தலைவர்கள் யாரும் கட்சியில் இருந்து விலக மாட்டார்கள்.

நான் காங்கிரசில் சேர்வது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தேவேகவுடா எனது தந்தை போன்றவர். அவரால் தான் நான் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர்ந்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story