எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது - பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர்


எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது - பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர்
x

எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது என பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர் கூறினார்.

சனாதன தர்ம சர்ச்சை

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைவர்கள் பலரும் சனாதனத்துக்கு எதிராக பேசிவருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பூமியில் உள்ள எந்த சக்தியாலும் சனாதனத்தை ஒழிக்க முடியாது என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், இமாசலபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-

எந்த சக்தியாலும் ஒழிக்க முடியாது

தங்களை அறிவாளிகள் என்று அழைத்துக்கொள்ளும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மவுனமாக இருந்து, சனாதனம் குறித்த தி.மு.க. தலைவர்களின் கருத்துகளை ஆதரிக்கின்றனர். சனாதன தர்மத்திற்கு எதிரான தீங்கிழைக்கும் பிரசாரத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் நிறுத்த வேண்டும்.

கடந்த 1,000 ஆண்டுகளாக இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பதை சனாதன தர்மத்தை தாக்க முயற்சிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பூமியில் உள்ள எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது. மேலும் சனாதன தர்மத்தை முடிக்க முயன்ற படையெடுப்பாளர்கள் தங்களை முடித்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story