நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா


நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா
x

கோப்புப்படம்

நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உலக பால்வள உச்சி மாநாட்டையொட்டி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

'நாட்டில் தற்போது உரத் தட்டுப்பாடு இல்லை. யூரியா அல்லாத உரங்களின் விலை உயர்த்தப்படாது. ரபி பருவத்துக்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். அதற்காக சர்வதேச சந்தை விலை குறித்து ஆராயப்படும். டி.ஏ.பி. மற்றும் யூரியா அல்லாத உரங்களின் சில்லறை விலை உயர்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சர்வதேச அளவில் ஏற்படும் விலை அதிகரிப்பு சுமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

கடந்த நிதியாண்டில் உரத்துக்கு அரசு வழங்கிய மானியம் ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது என்றால், அது இந்த நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் கோடி முதல் ரூ.2.25 கோடி வரை இருக்கும். வழக்கமான உரத்துக்குப் பதிலாக விவசாயிகள் அதிகளவில் நானோ திரவ யூரியாவை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது நல்லது. அது நிலத்தை அதிகம் பாதிக்காது. வழக்கமான யூரியா மற்றும் நானோ திரவ யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறும் என்பதால், வருகிற 2025-ம் ஆண்டு இறுதி முதல் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story