எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்


எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்
x

எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை என்றும் நாடாளுமன்ற மரபுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலே வெளியிடப்பட்டு உள்ளது என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று கூறியுள்ளார்.



புதுடெல்லி,



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது என்ற தகவல் வெளியானது.

அந்த புத்தகத்தில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு பதிலளிக்கும் வகையில் கூறும்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை. இந்த பட்டியலானது, கடந்த காலங்களில் அவைகளில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தை பதிவுகளின் தொகுப்புகள் ஆகும் என விளக்கம் அளித்து உள்ளார். நாடாளுமன்ற மரபுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலே வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் மரபுக்கு உட்படாத, பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளின் புத்தகம் வெளியிடப்பட்டு வந்தது. காகிதங்கள் வீணாகாமல் தவிர்க்க, இவற்றை நாங்கள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம். எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்புகளையே நாங்கள் வெளியிட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.

அவர்கள் (எதிர்க்கட்சிகள்) 1,100 பக்கம் கொண்ட இந்த அகராதியை (பேச தகுதியற்ற வார்த்தைகள் உள்பட) வாசித்து உள்ளார்களா? ஒரு வேளை அவர்கள் வாசித்து இருப்பின், தவறான தகவல்களை பரப்பியிருக்க மாட்டார்கள்.

கடந்த 1954, 1986, 1992, 1999, 2004, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் அவை வெளியிடப்பட்டு வந்தன. 2010ம் ஆண்டில் தொடங்கி ஆண்டுதோறும் அவை வெளியிடப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேச தகுதியற்ற வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது அரசின் மீது விமர்சனங்கள் தொடுக்கும் தங்களது திறனை முடக்கும் செயல் என கூறியுள்ளது.

இந்த பட்டியலில் மேற்கூறிய வார்த்தைகள் கூட்டத்தொடரிலோ, விவாதத்தின்போதோ அல்லது வேறெதிலும் பயன்படுத்தப்பட்டால் அவை நீக்கப்படும்.

எனினும், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மேலவை தலைவர்களே வார்த்தைகளை நீக்குவதில் இறுதி முடிவு செய்பவர்களாக இருப்பவர்கள். இரு அவைகளின் அவை தலைவருக்கு எதிராக, அவர்களது மதிப்புகளை சீர்குலைக்கும் வகையில் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசும் வார்த்தைகள் தகுதியற்றவை என கொள்ளப்பட்டு அவை, நாடாளுமன்ற குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story