கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்


கர்நாடக சட்டசபை தேர்தல்:  வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
x

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ேம) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ேம) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கடந்த மார்ச் 29-ந்தேதி டெல்லியில் வெளியிட்டார்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ந்தேதி (இ்ன்று) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சியும் கடந்த மார்ச் 26-ந்தேதி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும், 2-வது கட்டமாக கடந்த 6-ந்தேதி 42 தொகுதிகளுக்கும் என மொத்தம் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான பா.ஜனதா வேடபாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி இழுபறி நீடித்தது. மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது. இதனால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 4 நாட்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு அக்கட்சியின் மேலிட பார்வையாளர் அருண்சிங் நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து 189 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.வேட்புமனு தாக்கல் தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும். அதனால் அந்த நாட்களில் மனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு வேட்பாளர்களும் வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் வழங்க வேண்டும். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையும், தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். பொது வேட்பாளருக்கு டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும்.

வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம்.

வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைனில் செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் சுயேச்சையாக போட்டியிடுபவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

பெங்களூருவில் மாநகராட்சியின் 8 மண்டல அலுவலகங்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்து பிற மாவட்டங்களில் மாநகராட்சி, கலெக்டர், தாலுகா அலுவலகங்கள், மண்டல கமிஷனர் அலுவலகங்களும் தேர்தல் அலுவல கங்களாக செயல்பட உள்ளன. சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அங்கு வந்து மனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் நடைபெறும் அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் சிறிது தூரத்திற்கு முன்பே நின்றுவிட வேண்டும்.இதற்காக அங்கு இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்ட 4 ேபர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்ய வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கும் நிலையில், ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட தொடங்கிவிட்டனர். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.


Next Story