'பி' படிவத்துக்கு தலா ரூ.2 லட்சம் வசூல்: காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - தேர்தல் அதிகாரியிடம் மத்திய மந்திரி ஷோபா புகார்


பி படிவத்துக்கு தலா ரூ.2 லட்சம் வசூல்: காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - தேர்தல் அதிகாரியிடம் மத்திய மந்திரி ஷோபா புகார்
x
தினத்தந்தி 22 April 2023 3:57 AM IST (Updated: 22 April 2023 3:58 AM IST)
t-max-icont-min-icon

'பி' படிவத்துக்கு தலா ரூ.2 லட்சம் வசூல் செய்து இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய மத்திய மந்திரி ஷோபா மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு:

தேர்தல் ஆணையத்தில் புகார்

கர்நாடக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வேளாண் துறை இணை மந்திரியுமான ஷோபா கரந்தலாஜே நேற்று, பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒரு புகார் மனு வழங்கினார்.

அதில், காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் 'பி' படிவம் வழங்க தலா ரூ.2 லட்சம் வீதம் வசூல் செய்துள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூ.2 லட்சம் வசூல்

இதுகுறித்து மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் இருந்து அக்கட்சி மேலிட தலைவர்கள் பணம் பெற்றுக்கொண்டு 'பி' படிவம் வழங்கியுள்ளனர். குறிப்பாக பி படிவத்தை அக்கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் அனைத்து வேட்பாளர்களிடம் இருந்தும் தலா ரூ.2 லட்சம் பெற்றுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் நபர் 'பி' படிவம் பெற கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சட்டவிரோதமாக தலா ரூ.2 லட்சம் பணம் பெற்றுள்ளனர். இது லஞ்சம் பெற்றதற்கு சமம்.

வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்

எனவே கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story