டெல்லி துணை முதல்-மந்திரி மீது 'அவதூறு வழக்கு தொடர்வேன்'- அசாம் முதல்-மந்திரி ஆவேசம்
தொற்று பாதுகாப்பு கவசங்கள் வாங்குவதில் அசாம் முதல் மந்திரி முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார்.
கவுகாத்தி,
டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா அலையின்போது, அசாம் மாநில அரசு தொற்று பாதுகாப்பு கவசங்களை தலா ரூ.600 விலையில் சில நிறுவனங்களிடம் இருந்து வாங்கியது.
அதேவேளையில், அப்போதைய சுகாதார மந்திரியான ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்த கவசங்களை தனது மனைவி பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் இருந்து வாங்குவதற்கு அவசரமாக ஆர்டர் கொடுத்தார். அந்த கவசங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.990 என்ற கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டது. அந்த பாதுகாப்பு கவசங்களை அந்நிறுவனத்தால் சப்ளை செய்யமுடியாத நிலையில், சர்மாவின் மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் இருந்து தலா ரூ.1,680 என்ற விலைக்கு வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது' என்று சில ஊடக செய்திகளை சுட்டிக்காட்டி கூறினார்.
'தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மா அசாம் முதல்-மந்திரியாக உள்ள நிலையில், பா.ஜ.க. இந்த ஊழல் விஷயத்தில் ஏன் மவுனம் சாதிக்கிறது?' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில், 'உண்மையில் எனது மனைவி ரிங்கி சர்மா புயான், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் இருந்து ஆயிரத்து 500 கொரோனா தொற்று கவசங்களை இலவசமாகவே கொடுத்தார். அதற்காக அவர் ஒரு பைசாகூட பெற்றுக்கொள்ளவில்லை. அதுகுறித்து அப்போதைய தேசிய சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் லட்சுமணனும் அந்த நிறுவனத்துக்கு பாராட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால் இந்த உண்மைக்கு புறம்பாக என் மீது குற்றம்சாட்டியுள்ள மணிஷ் சிசோடியா மீது நான் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்வேன். அந்த வழக்கை எதிர்கொள்ள கவுகாத்தி வரும் சிசோடியாவை நான் சந்திக்கிறேன்' என்று சீற்றமாக தெரிவித்துள்ளார்.