தேர்தல் அறிக்கையில் தவறான இந்திய வரைபடம்- நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசிதரூர்


தேர்தல் அறிக்கையில் தவறான இந்திய வரைபடம்- நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சசிதரூர்
x

Image Courtesy: PTI 

இந்திய வரைபடம் தவறாக வெளியிடப்பட்டதற்கு சசிதரூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி சசிதரூர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அவர் தனது தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

சசிதரூரின் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் சில பகுதிகள் தவிர்க்கப்பட்டு இருந்தது. தவறான இந்த வரைபடத்தை சசி தரூரின் அலுவலகம் கண்டறிந்து பின்னர் தேர்தல் அறிக்கையில் திருத்தங்களைச் செய்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சசிதரூரின் அறிக்கையில் இந்தியாவின் வரைபடம் தவறாக இருந்ததை பாஜக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது.

இந்த நிலையில் இந்திய வரைபடம் தவறாக வெளியிடப்பட்டதற்கு சசிதரூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "யாரும் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை. ஒரு சிறிய குழு தவறு செய்தது. நாங்கள் அதை உடனடியாக சரிசெய்தோம். நடந்த பிழைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.



Next Story