தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவிப்பு கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எடியூரப்பா


தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவிப்பு கடைசி சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எடியூரப்பா
x

தென்னிந்தியாவில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. தென்னிந்தியாவில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 40 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு எடியூரப்பா தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கு 79 வயதாகி விட்டதால், வருகிற மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனால் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பாவுக்கு பதிலாக, அவரது மகன் விஜயேந்திரா போட்டியிடுவாரா? இல்லையெனில் வேறு யாரும் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 1983-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எடியூரப்பா எம்.எல்.ஏ.வாகி, விதானசவுதாவுக்குள் சென்றிருந்தார். அன்று முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு எடியூரப்பா வெற்றி பெற்றிருந்தார். கடந்த 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலை தவிர்த்து மற்ற தேர்தலில் எடியூரப்பா வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றிருந்தார். கர்நாடக சட்டசபை காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் எடியூரப்பா பங்கேற்பது தான் கடைசி கூட்டத்தொடர் ஆகும். தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவர் அறிவித்திருப்பதால், கர்நாடக சட்டசபையில் நடைபெறும் கூட்டத்தொடரில் இனிமேல் எடியூரப்பாவால் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story