நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு... பெண்ணின் அரை நிர்வாண வீடியோ வழக்கில் கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு


நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு... பெண்ணின் அரை நிர்வாண வீடியோ வழக்கில் கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு
x

கலை என்ற பெயரில் அரை நிர்வாண உடலில் குழந்தையை வர்ணம் தீட்ட கூறிய பெண் ஆர்வலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு அவரை விடுவித்து உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற பெண் ஆர்வலர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டார். அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன் 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது. இது கேரளா முழுவதும் சர்ச்சையாக வெடித்தது.

அவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. போக்சோ வழக்கும் பாய்ந்தது.

இந்த வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், பெண் ஒருவர் தனது அரை நிர்வாண உடலின் மேல் பாகத்தில் தன்னுடைய குழந்தையை விட்டு, வர்ணம் தீட்ட கூறியுள்ளார்.

இதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளார். குழந்தைகளை ஆபாச படத்திற்கு அந்த பெண் பயன்படுத்தி உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. போக்சோ வழக்கின் பிரிவு 13, 14 மற்றும் 15-ன் கீழ் அந்த பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டும் பதிவானது.

இதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பில், ஆடவர்கள் சட்டை இல்லாமல் அல்லது டி-சர்ட் அணியாமல் சென்றால் அது ஆபாசம் அல்லது கண்ணிய குறைவு என இந்த சமூகம் பார்ப்பதில்லை. ஏன் இது பெண்களுக்கும் பொருந்துவதில்லை? ஒரு தாயின் மேல் உடம்பில் அவரது சொந்த குழந்தையால் கலை படைப்பிற்காக வர்ணம் தீட்டுவது என்பது, பாலியல் செயலை தூண்டுவது கிடையாது.

அதில் பாலியல் தூண்டல் அல்லது பாலியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று கூறுவதற்கில்லை. கலையை வெளிப்படுத்தும் அப்பிராணியான இந்த செயலை, குழந்தையை பாலியல் செயலை தூண்ட பயன்படுத்துகின்றனர் என கூறுவது இரக்கமற்றது.

இதில், குழந்தையை ஆபாசத்துடன் பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என கூறும் வகையில் எதுவும் வெளிப்படவில்லை. அந்த வீடியோவில் பாலியல் சார்ந்த எந்த விசயங்களும் இல்லை. அதனால், நிர்வாண உடல்களை வழக்கம்போல் பார்ப்பதே முற்றிலும் சரி என்றும் இதில் எந்தவித தவறும் காணப்படவில்லை என்றும் ஐகோர்ட்டு கூறியுள்ளது.

ஆடவர்களின் உடலுக்கான உரிமை பற்றி கேள்விகள் எழுவது மிக அரிது என்ற சூழலில், பெண்களின் சுயஉரிமை பற்றி தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது என கூறியுள்ளது. பெண்கள் தங்களுடைய சொந்த உடல் மீது உரிமை கொள்வது மறுக்கப்பட்டு வருகிறது என கூறி வழக்கில் இருந்து அந்த பெண்ணை கோர்ட்டு விடுவித்து உள்ளது.

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தபோது கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்கு சென்று வந்தனர். அப்போது ரெஹானா பாத்திமா என்ற இந்த பெண் ஆர்வலரும் சபரிமலை ஏற முயன்று தோல்வியுற்றார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா பின்னர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன்பின், அரை நிர்வாண நிலையில் பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும், மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் அதில் அவர் தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலை பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்று கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும் என அதில் குறிப்பிட்டார்.


Next Story