என்விஎஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
என்விஎஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட என்விஎஸ்-01 வழிகாட்டி செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுவட்டப்பதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் திறன் கொண்டது. கடல்சார் இருப்பிடம், பேரிடர் மேலாண்மை தகவல்களை வழங்கும். செல்போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு, நிதி, மின்துறை நிறுவனங்களுக்கு தரவுகளை பெறமுடியும் என்றும் இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்றும் பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.