திருமணம் செய்துகொள்ள வரவில்லை; எம்.எல்.ஏ. மீது பெண் போலீசில் புகார்...!
தன்னை திருமணம் செய்துகொள்ள எம்.எல்.ஏ. வரவில்லை என மணப்பெண் புகார் அளித்துள்ளார்.
புவனேஷ்வர்,
திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. மீது பெண் புகார் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் ட்ரிட்டோல் தொகுதி பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பிஜெய் சங்கர் தாஸ் (30). இவர் சோமாலிகா (29 வயது) என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்இன் உறவு முறையில் இருந்துள்ளார். அதேவேளை, இருவரும் பதிவு திருமணம் செய்துகொள்ள மே 17-ம் தேதி பதிவு செய்துள்ளனர். அதன்படி, அந்த பெண்ணிடம் கடந்த 17-ம் தேதி திருமணம் செய்துகொள்வதாக எம்.எல்.ஏ. சங்கர் கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த பெண் மணபெண் கோலத்தில் நேற்று முன் தினம் திருமண பதிவு அலுலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்துள்ளார். ஆனால், பெண்ணை பதிவுத்திருமணம் செய்துகொள்ள எம்.எல்.ஏ சங்கர் வரவில்லை.
இதனால், சேர்ந்து வாழ்ந்துவிட்டு திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக எம்.எல்.ஏ. சங்கர் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார். மேலும், எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக எம்.எல்.ஏ. சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. சங்கர் கூறுகையில், பதிவுத்திருமணம் செய்துகொள்ள இன்னும் 60 நாட்கள் உள்ளன. திருமணத்தை நிறுத்த நான் முயற்சிக்கவில்லை. பதிவுத்திருமணம் தொடர்பாக மணப்பெண்ணோ அவரின் குடும்பத்தினரோ என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை' என்றார்.