ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம்


ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம்
x

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனித்துவ மற்றும் திறமையான தலைமைத்துவ பண்புகளுக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,



புதுடெல்லியின் இந்திய சர்வதேச மையத்தில் ஒடிசாவின் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனித்துவ மற்றும் திறமையான தலைமைத்துவ பண்புகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விருது வழங்கும் விழாவில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான என்.வி. ரமணா கலந்து கொண்டு அவருக்கு விருது வழங்கி கவுரவித்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நவீன் பட்நாயக், பல்வேறு துறைகளில் வெளிப்படையான விவாதம் மற்றும் ஆலோசனைகளுக்கு முக்கிய இடம் வழங்கி பல ஆண்டுகளாக தன்னை நிலைநிறுத்தி கொண்ட கேப்பிடல் பவுண்டேசன் அமைப்பு என்னை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் நடக்கும் சிறந்த பணிகளை அங்கீகரித்து, பாராட்டும் செயலுக்காக இந்த அமைப்புக்கு எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். ஒடிசாவின் 4.5 கோடி மக்களுக்கு இந்த விருது அர்ப்பணிக்கப்படுகிறது. 22 ஆண்டுகளாக அவர்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து எனக்கு அவர்கள் ஆசி வழங்கியுள்ளனர்.

என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையானது, ஆற்றல் படைத்த ஒடிசாவை உருவாக்குவதற்கான பணியில் ஈடுபட பெரிதும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என அவர் பேசியுள்ளார்.

ஒரு காலத்தில் வறுமையின் அடையாளம் என காணப்பட்ட ஒடிசா, நம்முடைய நாட்டில் விரைவாக வறுமையை குறைத்த மாநிலம் என தற்போது அறியப்படுகிறது.

பெண்கள், பழங்குடியின சமூகத்தினர் அதிகாரம் பெறுவதற்கான பணியில் எங்களுடைய அரசின் மாடல் வேரூன்றி, ஆழமுடன் செயல்படுவதில் உண்மையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றும் விழாவில் அவர் கூறியுள்ளார்.


Next Story