துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா சுகாதாரத்துறை மந்திரி உயிரிழப்பு...!
பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க சென்ற சுகாதாரத்துறை மந்திரி மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ். இவர் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் இன்று திறக்க ஜஹர்சுஹுடா மாவட்டம் பிரஜாராஜ்நகரின் காந்தி சவுக் பகுதிக்கு வந்தார்.
மதியம் 12.30 மணிக்கு அப்பகுதிக்கு வந்த மந்திரி நபா தாஸ் காரில் இருந்து கிழே இறங்கினார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மந்திரியின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன.
இந்த சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மந்திரி நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மந்திரி நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு ஒடிசா முதல்-மந்திரி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மந்திரி நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியுள்ளது. இதில், இதயம் மற்றும் நுரையீரலில் காயம் ஏற்பட்டு உடல் உள் உறுப்புகளில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதய துடிப்பை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.