பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க சென்ற மந்திரி மீது துப்பாக்கிச்சூடு, கவலைக்கிடம்; சப்-இன்ஸ்பெக்டர் வெறிச்செயல்
பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க சென்ற சுகாதாரத்துறை மந்திரி மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ். இவர் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் இன்று திறக்க ஜஹர்சுஹுடா மாவட்டம் பிரஜாராஜ்நகரின் காந்தி சவுக் பகுதிக்கு வந்தார்.
மதியம் 12.30 மணிக்கு அப்பகுதிக்கு வந்த மந்திரி நபா தாஸ் காரில் இருந்து கிழே இறங்கினார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மந்திரியின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன.
இந்த சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என பார்ப்பதற்குள் போலீஸ்காரர் வேகமாக அங்கிருந்து ஓடினார்.
அவரை விரட்டிப்பிடித்த சகபோலீசார் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதில், மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பது தெரியவந்தது.
பிடிபட்ட கோபால் தாஸ் குப்தேஷ்புரில் உள்ள போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டரான பணியாற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மந்திரி நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபா தாசின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.