அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து மிரட்டல்; மோசடி ராணி அர்ச்சனாவின் சொத்து முடக்கம்


அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து மிரட்டல்; மோசடி ராணி அர்ச்சனாவின் சொத்து முடக்கம்
x

அர்ச்சனாவின் மோசடி வலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகள், பெரும்பணக்காரர்கள், சினிமா பிரபலங்களும் சிக்கியுள்ளனர்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த ஜெக்பந்து சந்த். இவர் பழைய கார், பைக்குகளை மறுவிற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். ஜெக்பந்துவின் மனைவி அர்சனா நாக் (வயது 26). இவர் அழகுநிலைய கலைஞராக வேலை செய்து வந்தார்.

இதனிடையே, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அர்சனா தனது கணவருடன் சேர்ந்து அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கார், பைக் விற்பனை மூலம் அர்ச்சனாவும் அவரது கணவரும் ஒடிசாவில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பிரபலமானவர்களுடன் அறிமுகமாகியுள்ளனர்.

பின்னர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு பெண்களை பாலியல் ரீதியிலான உறவுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்களுடன் இந்த பிரபலங்கள் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க காட்சிகளை அர்ச்சனாவும், அவரது கணவரும் சேர்ந்து ரகசியமாக வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர், ரகசியமாக எடுத்த அந்த அந்தரங்க புகைப்படம், வீடியோக்களை வெளியிடாமல் இருக்கவேண்டுமானால் கேட்ட பணத்தை தரவேண்டும் என்று அர்ச்சனாவும் அவரது கணவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.

அந்த மிரட்டலுக்கு அஞ்சி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை கொண்டு அர்ச்சனாவும் அவரது கணவரும் சொகுசாக வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே, பெண்களுடன் தனிமையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் 3 கோடி ரூபாய் தரவேண்டுமென மிரட்டுவதாக அர்ச்சனா மீது சினிமா தயாரிப்பாளர் கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி அர்ச்சனாவையும் அவரது கணவர் ஜெக்பந்துவையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது அர்ச்சனாவின் வலையில் ஒடிசாவை சேர்ந்த அரசியல்வாதிகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சினிமா பிரபலங்கள், பணக்காரர்கள் உள்பட பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பணமோசடி என்பதால் இந்த வழக்கை அமலக்கத்துறையும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் மோசடி ராணி அர்ச்சனாவின் சொகுசு வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. புவனேஷ்வரில் உள்ள 3.64 கோடி ரூபாய் மதிப்பிலான அர்ச்சனாவின் வீட்டை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் ஏற்கனவே அர்ச்சனாவின் 56 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... விடிய விடிய உல்லாசம், ரகசிய வீடியோ...! மோசடி ராணி வலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் - மந்திரிகள்


Next Story