ஒடிசா ரெயில் விபத்து: 7 ரெயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம்


ஒடிசா ரெயில் விபத்து: 7 ரெயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம்
x

கோப்புப்படம்

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த மாதம் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரெயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டன.

நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், மனித தவறுகளால் விபத்து நேரிட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனிடையே இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

7 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

அந்த வகையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 ரெயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தென்கிழக்கு ரெயில்வே பொது மேலாளர் அனில் குமார் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், "அதிகாரிகள் உஷாராக இருந்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்" என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட 3 பேர் உள்பட 7 ஊழியர்களை ரெயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது" என்றார்.


Next Story