ஒடிசா ரெயில் விபத்தில் அவலம்; பஸ் கட்டண தொகையை உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கும் ஏஜெண்டுகள்


ஒடிசா ரெயில் விபத்தில் அவலம்; பஸ் கட்டண தொகையை உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கும் ஏஜெண்டுகள்
x

ஒடிசா ரெயில் விபத்து நிகழ்வை பயன்படுத்தி, பஸ் கட்டண தொகையை ஏஜெண்டுகள் திடீரென உயர்த்தி லாபம் பார்க்கின்றனர் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொல்கத்தா,

ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 261 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 650-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த பகுதியில் செல்ல கூடிய பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் இருந்து ஒடிசாவின் பூரி நகருக்கு செல்ல வேண்டிய பயணிகள், திக்குமுக்காடி போயுள்ளனர். ரெயில்கள் ரத்து என தெரிய வந்ததும் அவர்கள் பஸ்களில் புறப்பட தயாரானார்கள்.

ஆனால், நிலைமையை தங்களுக்கு சாதகம் ஆக்கி கொள்ளும் வகையில் புக்கிங் ஏஜெண்டுகள் பஸ் கட்டண தொகையை திடீரென 2 மடங்கு, 3 மடங்கு என உயர்த்தி விட்டனர். இந்துக்கள் கொண்டாட கூடிய பண்டிகையான ஜெகநாதர் ஸ்நான யாத்திரை (குளியல் திருவிழா) நாளை நடைபெற உள்ளது.

இதற்காக பக்தர்கள் அனைவரும் பூரி நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். ரெயில் விபத்து எதிரொலியாக, ஒடிசாவை சுற்றியுள்ள பகுதிகளுக்கான பல்வேறு ரெயில்களை மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு தென்கிழக்கு ரெயில்வே, ரத்து செய்து விட்டது.

ஒடிசாவின் பத்ரக், கட்டாக் மற்றும் பூரி நகரங்களுக்கு செல்ல ஏ.சி. வசதி இல்லாத பஸ்களில் முறையே ரூ.400, ரூ.600 மற்றும் ரூ.800 என வசூலிக்கப்படும். ஆனால், இன்று அந்த கட்டணம் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உயர்ந்து விட்டது. சில ஏஜெண்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை கேட்கின்றனர்.

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக அதனை பயன்படுத்தி, பஸ் கட்டண தொகையை உயர்த்தி ஏஜெண்டுகள் சிலர் லாபம் பார்க்கும் செயலுக்கு பயணிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் ஒடிசா அரசு தங்களை பாதுகாக்க வேண்டும் என பயணிகள் பலர் வேண்டுகோளாக கேட்டு உள்ளனர்.


Next Story