ஒடிசாவின் முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ.வாக தேர்வான ஐ.ஐ.எம். பட்டதாரி
ஒடிசாவின் சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமிய பெண் சோபியா பிர்தவுஸ் எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டும் பிடித்து, ஆட்சியையும் பறிகொடுத்தது. இது தவிர காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவின் பாராபதி-கட்டாக் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 32 வயதான சோபியா பிர்தவுஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 69 வயது பா.ஜ.க. வேட்பாளர் பூர்ண சந்திரா மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் ஒடிசா சட்டசபைக்கு தேர்வான முதல் இஸ்லாமிய பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையை சோபியா பெற்றுள்ளார்.
ஒடிசா சட்டசபை வரலாற்றில் கடந்த 1937-ம் ஆண்டு முதல் இதுவரை 141 பெண் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுள்ளனர். ஆனால் இதுவரை இஸ்லாமிய பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றது இல்லை. தற்போது முதல் முறையாக இஸ்லாமிய பெண் சோபியா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். இவர் பாராபதி-கட்டாக் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முகமது மோகிமின் மகள் ஆவார்.
புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள சோபியா, பெங்களூரு ஐ.ஐ.எம். கல்லூரியில் நிர்வாக பொது மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து சோபியா கூறுகையில், "ஒரு இஸ்லாமிய பெண்ணாக நான் வரலாறு படைத்திருக்கிறேன் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், ஒடிசா சட்டசபையில் இன்னும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. இந்த முறை தேர்வான 147 எம்.எல்.ஏ.க்களில் 11 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பெண்கள் வர வேண்டும். அரசியலில் எனது முன்மாதிரியாக முன்னாள் முதல்-மந்திரி நந்தினி சதாபதியை நான் கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.