ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய கர்நாடக முதியவர் மாரடைப்பால் சாவு


ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய கர்நாடக முதியவர் மாரடைப்பால் சாவு
x

109 பேருடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட முதியவர் ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

109 பேருடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட முதியவர் ஒடிசா ரெயில் விபத்தில் தப்பிய நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

110 பேர் ஆன்மிக பயணம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் இருந்து கலசா, ஒரநாடு, உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 110 பேர் வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். குறிப்பாக அவர்கள் 24-வது சமண தீர்த்தங்கரர் முக்தி பெற்ற தலமான ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவில், காசி, உஜ்ஜைனி கோவில்களுக்கும் செல்ல தீர்மானித்து இருந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 30-ந்தேதி மாலை சிக்கமகளூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்திற்கு மறுநாள் காலை வந்தனர்.

பின்னர் அங்கிருந்து அவர் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு சென்றனர். 110 பேரும் ரெயிலின் எஸ். 3, 4, 5 எண் கொண்ட பெட்டிகளில் பயணித்தனர்.

ரெயில் விபத்தில் உயிர் தப்பினர்

இடையில் ரெயில் என்ஜின் மாற்றப்பட்டதில் அவர்கள் பயணித்த ரெயில் பெட்டிகள் கடைசியாக சென்றது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்ற போது, சரக்கு ரெயில் மீது மோதி கவிழ்ந்த சென்னை-கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது அவர்கள் பயணித்த பெங்களூரு-ஹவுரா ரெயில் மோதியது.

இந்த கோர விபத்தில் 288 பேர் பலியானார்கள். மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர ரெயில் விபத்தில் 110 பேரும் உயிர் தப்பினர். அவர்கள் பயணித்த ரெயிலின் 2 பொதுப்பெட்டிகளும், பிரேக் வேகனும் விபத்தில் சிக்கியது. 110 பேரும் நூலிழையில் உயிர்தப்பியதால் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மாரடைப்பால் சாவு

இதையடுத்து அவர்கள் ஆன்மிக பயணத்தை தொடர்ந்தனர். இவர்கள் பல ஆன்மிக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து 110 பேரும் நேற்று உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் பெங்களூருவுக்கு வர திட்டமிட்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் ஆன்மிகபயணம் மேற்கொண்டவர்களில் சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா கலகோடு கிராமத்தை சேர்ந்த தர்மபாலய்யா (வயது 72) என்பவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிேசாதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பால் அவர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

உடலை சொந்த ஊருக்கு...

இதனால் அவருடன் ஆன்மிக பயணம் செய்தவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதையடுத்து உயிரிழந்த தர்மபாலய்யாவின் உடலை சொந்த ஊரான கலகோடு கிராமத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஒடிசா ரெயில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story