போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை பரிசோதித்தபோது விபத்து: பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்கு வந்த பெண் தலையில் பாய்ந்த குண்டு
போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தபோது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்தது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் இஷ்ரத். இவர் சவுதி அரேபியாவுக்கு இஸ்லாமிய மத புனிதப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டு பெறவும் விண்ணப்பித்திருந்தார்.
இதனிடையே, அலிகாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இஷ்ரத்தின் பாஸ்போர்ட்டு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பாஸ்போர்ட்டு சரிபார்ப்பிற்காக இஷ்ரத் நேற்று அலிகார் போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா துப்பாக்கியை பரிசோதித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென இன்ஸ்பெக்டர் மனோஜ் வைத்திருந்த துப்பாக்கி சுட்டது. இதில், பாஸ்போர்ட்டு சரிபார்ப்பிற்கு வந்திருந்த இஷ்ரத் தலைமீது குண்டுபாய்ந்தது. உடனடியாக அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார், இஷ்ரத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா தலைமறைவானார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.