கேளிக்கை விடுதியில் வாக்குவாதம்: இளம்பெண்ணை கார் ஏற்றி கொன்ற நபர்
உமாவும் அவரது காதலனும் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளனர்.
ஜெய்ப்பூர்,
மத்தியபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, உமாவும் அவரது காதலனும் நேற்று இரவு ஜெய்ப்பூரில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளனர். விடுதியை விட்டு வெளியே வந்த உமாவுக்கும் மற்றொரு தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் உமாவும், அவரது காதலனும் சேர்ந்து அந்த தம்பதியிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அந்த தம்பதி தங்கள் காரில் ஏறி புறப்பட்டுள்ளனர். அப்போது, உமாவும் அவரது காதலனும் சேர்ந்து அந்த காரை மறித்துள்ளனர்.
ஆனால், அந்த காரை ஓட்டிய மங்கேஷ் அதை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது, உமா கார் சக்கரத்திற்குள் சிக்கிக்கொண்டார். உமாவின் காதலன் சாலையில் தூக்கிவீசப்பட்டார்.
அதேவேளை, கார் சக்கரத்தில் சிக்கிய உமா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உமாவின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உமாவை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மங்கேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் உமாவை மங்கேஷ் கார் ஏற்றி கொலை செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.