தொடர் விடுமுறையையொட்டி சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர்விடுமுறையையொட்டி சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சிக்கமகளூரு-
தொடர்விடுமுறையையொட்டி சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தொடர் விடுமுறை என்பதால் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். அதாவது, வெள்ளிக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் மத்திய அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக ஏராளமானோர் சிக்கமகளூருவில் குவிந்தனர்.
அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்
இங்கு முல்லையன்கிரி, பாபாபுடன்கிரி மலை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். கர்நாடகாவில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் ஒன்னமன், கல்லத்தி, ஜெரி அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வெப்பத்தை தணித்து கொண்டனர். அருவிகளுக்கு செல்லும் இடங்களில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. கல்லத்தி பகுதியில் உள்ள கோவிலிலும் மக்கள் வழிபட்டனர். முல்லையன்கிரி மலைப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், சிருங்கேரி சாரதம்மா, ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர். சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றதால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை பணியில் இருந்த போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.