பா.ஜனதா பிரமுகர் தற்கொலை குறித்து மனைவியிடம் 4 மணி நேரம் விசாரணை


பா.ஜனதா பிரமுகர் தற்கொலை குறித்து மனைவியிடம் 4 மணி நேரம் விசாரணை
x
தினத்தந்தி 25 May 2022 5:08 PM GMT (Updated: 25 May 2022 5:14 PM GMT)

பா.ஜனதா பிரமுகர் தற்கொலை குறித்து மனைவியிடம் 4 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

பா.ஜனதா பிரமுகர் தற்கொலை குறித்து மனைவியிடம் 4 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

ஆடியோக்கள் வெளியானது

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்தராஜ், பா.ஜனதா கட்சியின் பிரமுகர். இவரது மனைவி சுமா. கடந்த 12-ந் தேதி ஆனந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் உடல் நலக்குறைவு மற்றும் சொந்த காரணங்களால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஹனிடிராப் முறையில் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால் அவர் தற்கொலை செய்ததாக மனைவி சுமா குற்றச்சாட்டு கூறினார்.

அவரது புகாரின் பேரில் பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜின் தோழியான ரேகா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதற்கிடையில், சுமாவும், ரேகாவும் பேசும் செல்போன் உரையாடல் பற்றிய ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. அதில், தனது கணவரை நான் கொடுத்த தொல்லை, துன்புறுத்தல் காரணமாக உயிரை விட்டு இருப்பதாக சுமா கூறி இருந்தார்.

மனைவியிடம் போலீஸ் விசாரணை

இந்த ஆடியோ விவகாரம் ஆனந்தராஜ் தற்கொலையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சுமாவுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பினார்கள். அதன்படி, நேற்று முன்தினம் மாலையில் பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் சுமா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனந்தராஜ் தற்கொலை குறித்து சுமாவிடம் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில் எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்று சுமாவிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனந்தராஜ் தற்கொலை குறித்த முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்துள்ளது. முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை தொடங்க ஆனந்தராஜின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பேடரஹள்ளி போலீசார் காத்திருக்கின்றனர். இதனால் பா.ஜனதா பிரமுகர் ஆனந்தராஜின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் தொடர்ந்து மர்மமாக இருந்து வருகிறது.


Next Story