கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியது
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
இந்த பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை கொண்டாட்டம், ஆவணி அஸ்தம் நட்சத்திர நாளான இன்று தொடங்கியது. இதையொட்டி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடக்கம் கோலாகலமாக நடைபெற்றது. பெண்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
இனி வரும் 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாட்டமாக மகாபலி ராஜாவை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் வீடுகளில் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.