கர்நாடகத்தில் மேலும் ஒருவரின் ஆபாச வீடியோ வெளியாகும்: பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்
பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ விவகாரத்தில் கர்நாடக அரசு அமைத்தள்ள சிறப்பு புலனாய்வு குழு டி.கே.சிவக்குமாரின் கையில் உள்ளது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் மேலும் ஒருவரின் ஆபாச வீடியோ சி.டி. பகிரங்கமாக உள்ளது. இதை நான் விளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் முன்பே கர்நாடகத்தில் ஆபாச சி.டி. வெளியாக உள்ளது என்று கூறினேன். அது யாருடையது என்று நான் கூறவில்லை. எனது பேச்சு தற்போது உண்மையாகிவிட்டது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரத்தின் பின்னணியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளார்.
கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு டி.கே.சிவக்குமாரின் கையில் உள்ளது. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி அந்த விசாரணை குழு செயல்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோவால் வட கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வெற்றியின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த பகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி அந்த அளவுக்கு பலமாக இல்லை. அதனால் பா.ஜனதாவுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.