காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் தாங்டார் செக்டாரின் சைட்போரா பகுதியில் 3 பேர் எல்லையை தாண்டி ஊடுருவ முயன்றதை ஊடுருவல் தடுப்பு வேலி எச்சரித்தது. இதையடுத்து ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டனர்.
அப்போது ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொருவர் காயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து பயங்கரவாதிகள் ஊடுருவலை கைவிட்டு தப்பியோடிவிட்டனர்.
விடிந்ததும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது இறந்த பயங்கரவாதியின் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே. வகை துப்பாக்கி, 6 தோட்டா குப்பிகள், 2 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆண்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட முதல் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.