'ஐ.டி.' தம்பதி விவாகரத்து வழக்கு: "ஒருவருக்கு பகலிலும், மற்றவருக்கு இரவிலும் வேலை; திருமண உறவுக்கு நேரம் எங்கே இருக்கிறது?" சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
‘சாப்ட்வேர் என்ஜினீயர்’ தம்பதியரின் விவாகரத்து வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.
புதுடெல்லி,
பெங்களூருவில் 'சாப்ட்வேர் என்ஜினீயர்'களாக வேலை செய்து வரும் ஒரு தம்பதியரின் விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது நீதிபதிகள், "நீங்கள் இருவரும் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கு பகல் நேரப் பணி. மற்றவருக்கு இரவு நேரப்பணி. திருமண உறவைப் பேணுவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? விவாகரத்தில் உங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் திருமணத்தில் வருத்தம் இருக்கிறது. நீங்கள் திருமண பந்தத்துக்கு மற்றொரு வாய்ப்பு தரக்கூடாதா?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "அடிக்கடி விவாகரத்துகள் நடைபெறும் இடம் அல்ல பெங்களூரு. தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழலாமே" எனவும் கூறினர்.
விவாகரத்து
ஆனால் அந்தத் தம்பதியரின் வக்கீல்கள், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு சமரச தீர்வு மையத்தை நாடி இணக்கமான முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்து திருமண சட்டம் பிரிவு '13-பி'யின்படி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர் என நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
மனைவிக்கு ஒரே நேரத்தில் ரூ.12.50 லட்சம் ஜீவனாம்சம் தந்து தீர்த்து விட கணவர் ஒப்புக்கொண்டு விட்டார் எனவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்தத் தம்பதியருக்கு சுப்ரீம் கோர்ட்டு விவாகரத்து வழங்கியது.
உத்தரவு
இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-
இந்த வழக்கில் இரு தரப்பு தீர்வு ஒப்பந்தத்தையும், அரசியல் சாசனம் பிரிவு 142-படி, தாக்கல் செய்துள்ள மனுவையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம். அதையே நாங்கள் பரிசீலனை செய்தோம். பரிசீலனை செய்ததில், தீர்வு ஒப்பந்தங்களின் விதிமுறைகள் சட்டப்பூர்வமானது; ஏற்றுக்கொள்வதற்கு எந்த சட்டத்தடையும் இல்லை என கண்டிருக்கிறோம்.
எனவே இந்தச் சூழ்நிலையில், நாங்கள் அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துகிறோம். 1955-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு '13-பி' யின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து உத்தரவு பிறப்பிக்கிறோம். இரு தரப்பினருக்கும் இடையிலான திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.