இமாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏவாக தேர்வு...!
நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டசபைதேர்தலில் ஒரே ஒரு பெண் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிம்லா,
இயற்கை எழில் கொஞ்சும் இமாசல பிரதேச மாநிலம், பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலம் ஆகும். இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்று, தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் என்னும் இமாசலபிரதேசத்தின் சரித்திரத்தை மாற்றிக்காட்டுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.
68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் நேற்று (டிச. 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இமாசலபிரதேச மாநிலத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது. குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
இங்கு 5 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் அந்தக் கட்சி வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கினர். இது அந்தக் கட்சியினருக்கு உற்சாகத்தைத் தந்தது.
இங்கு மொத்தம் உள்ள 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றிக்கனி பறித்துள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இங்கும் கால் பதித்து விடலாம் என்ற ஆம் ஆத்மியின் கனவு நிறைவேறவில்லை. அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்தநிலையில், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 68 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினர். இந்தத் தேர்தலில் பாஜக 6 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் 5 பெண் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 3 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தின. இவர்களில் ரீனா காஷ்யப் என்ற ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் பச்சாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் இவர்.
இந்தத் தேர்தலில், வாக்களித்த வாக்காளர்களில் 49% பேர் பெண்கள். இருந்தும் ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே தேர்வாகி இருப்பது தான் பெரும் சோகம். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைவிட காங்கிரஸ் பெற்ற கூடுதல் வாக்கு விகிதம் 0.90 இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் பெற்ற வாக்கு 43.90 சதவீதம். 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாஜக பெற்ற வாக்கு 43 சதவீதம். இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 0.90 சதவீதம் மட்டுமே.