பங்குனி ஆராட்டு விழாவுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு


பங்குனி ஆராட்டு விழாவுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
x

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக திறக்கப்பட்டது.

சபரிமலை கோவில்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

நடை திறப்பு

அதன்படி சபரிமலை கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி ஆராட்டு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

விழாவில் இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.

அய்யப்பனுக்கு ஆராட்டு

9-ம் திருவிழாவான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.


Next Story