'ஆபரேஷன் காவேரி': சூடானில் சிக்கித் தவித்த மேலும் 269 பேர் இந்தியா வருகை


ஆபரேஷன் காவேரி: சூடானில் சிக்கித் தவித்த மேலும் 269 பேர் இந்தியா வருகை
x

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் சிக்கித் தவித்த மேலும் 269 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப்போர் வெடித்துள்ளது. நாட்டை ஆளும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலில் இதுவரை 500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுப்போரால் சூடானில் அசாதாரண சூழல் நீடிப்பதால் அங்கு வசிக்கும் வெளிநாட்டு மக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன. அதன்படி சூடானில் சிக்கிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு 'ஆபரேஷன் காவேரி' என்ற அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

போர்க்கப்பல்கள், விமானங்கள்

இதற்காக சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானில் போர்க்கப்பல்களையும், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் போர் விமானங்களையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

சூடான் தலைநகர் கார்டூம் உள்பட பல்வேறு நகரங்களில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் பஸ்கள் மூலம் போர்ட் சூடான் நகருக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து கப்பல்கள் மற்றும் விமானங்களில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மற்றும் விமானப்படை விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அதன்படி இதுவரை 6 விமானங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

269 பேர் இந்தியா வந்தனர்

இந்த நிலையில் நேற்று மேலும் 2 விமானங்களில் 269 பேர் இந்தியா வந்தனர். 229 பேரை கொண்ட 7-வது குழு சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்த நிலையில், விமானப்படையின் சி-130 ஜே விமானத்தில் 40 இந்தியர்கள் அடங்கிய 8-வது குழுவினர் டெல்லி வந்தனர்.

இதன் மூலம் சூடானில் சிக்கியிருந்த சுமார் 2,400 இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சூடானின் போர்ட் சூடான் நகரில் இருந்து 288 இந்தியர்களை கொண்ட 14-வது குழு ஐ.என்.எஸ். டெக் போர்க்கப்பல் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு நேற்று அழைத்து வரப்பட்டதாகவும், இதன் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளதாகவும் டுவிட்டர் பதிவில் அரிந்தம் பாக்சி குறிப்பிட்டுள்ளார்.


Next Story