ஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகி விட்டது என நிரூபிக்கப்படும்; கெஜ்ரிவால் பேச்சு


ஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகி விட்டது என நிரூபிக்கப்படும்; கெஜ்ரிவால் பேச்சு
x

ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.விடம் விலை போகவில்லை என நிரூபிக்கும் முயற்சியாக டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.



புதுடெல்லி,



டெல்லி சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி கெஜ்ரிவால், நாட்டில் இன்று வரை பா.ஜ.க.வினர் பல அரசுகளை கவிழ்த்துள்ளனர். கோவா, கர்நாடகா, மராட்டியம், அசாம், மத்திய பிரதேசம், பீகார், அருணாசல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா என அரசு கவிழ்ப்பு பட்டியல் நீள்கிறது.

நகரில் ஒரு தொடர் கொலைக்காரர் உள்ளார். அவர், ஒன்றன்பின் ஒன்றாக படுகொலைகளை செய்து வருகிறார். பொதுமக்கள், அரசு ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி, தேர்ந்தெடுக்கும் அரசை அவர்கள் கவிழ்க்கின்றனர் என பா.ஜ.க.வை கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி பேசினார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசானது, வருகிற திங்கட்கிழமை அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. கூட கட்சியை விட்டு செல்லவில்லை என்று நிரூபணம் செய்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதுவரை 277 எம்.எல்.ஏக்களை பா.ஜ.க. விலைக்கு வாங்கி உள்ளது. ஆபரேசன் தாமரைக்கு 5 ஆயிரத்து 500 கோடி செலவு செய்துள்ளனர். டெல்லியில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 800 கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வசூல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை மூலம் கிடைக்கும் பணத்தில் பா.ஜ.க. மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகின்றனர். மணிஷ் சிசோடியா வீட்டில் தொடர்ந்து 14 மணி நேரம் சோதனை நடத்தியும் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை.

நகைகள், பணம் எதுவும் கிடைக்கவில்லை. நிலம், சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எதுவும் கிடைக்கவில்லை. அது பொய்யான ரெய்டு என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆபரேசன் தாமரை, ஆபரேசன் சேறு ஆகி விட்டது என நிரூபிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ள சூழலில், எந்தவொரு கட்சி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சியான பா.ஜ.க.விடம் விலை போகவில்லை என நிரூபிக்கும் முயற்சியாக டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியுள்ள பா.ஜ.க., ஆளும் கெஜ்ரிவால் அரசானது, மதுபான கொள்கை ஊழலில் இருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்பட வேண்டும் என்ற நோக்குடன் நாடகம் ஆடுகிறது என தெரிவித்து உள்ளது.

ஆனால், குஜராத் சட்டசபை தேர்தலில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வாபஸ் பெற்று விட்டால் இந்த சோதனைகள் அனைத்தும் நின்று விடும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story