விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது சட்டம்-ஒழுங்கை காக்க நடவடிக்கை; கலெக்டர்களுக்கு சித்தராமையா உத்தரவு


விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது சட்டம்-ஒழுங்கை காக்க நடவடிக்கை; கலெக்டர்களுக்கு சித்தராமையா உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்றும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள் மாநாடு பெங்களூரு விதானசவுதாவில் நேற்று நடைபெற்றது.

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போலீஸ் மந்திரி பரமேஸ்வர், சட்ட மந்திரி எச்.கே.பட்டீல், உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா, சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி, கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே, விவசாய மந்திரி செலுவராயசாமி உள்பட மந்திரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள், பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

அதிகாரிகள் எங்கு பணியாற்றுகிறாா்களோ அங்கேயே வசிக்க வேண்டும். நீங்கள் எப்போதும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கொண்டு பணியாற்றக்கூடாது. இதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு யாராவது செய்தால் அதை அரசு சகித்துக்கொள்ளாது.

அதிகாரிகளை செல்போனில் அழைத்தால் அதை எடுப்பது இல்லை என்று மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் தரப்பில் புகார்கள் உள்ளன. தொலைபேசியில் யார் அழைத்தாலும் பேச வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு முறைப்படி வழங்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதிகாரிகளின் இதயம் சரியான முறையில் பணியாற்ற வேண்டும்.

மனிதத்துவம் இல்லாதவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது. உங்களின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். இதை அரசு வேடிக்கை பார்க்காது. கர்நாடகத்தில் 251 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் 174 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வறட்சி பகுதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்களை கண்காணிக்க வேண்டும். வங்கிகள் விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும். அதனால் நீங்கள் உங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

சுகாதாரத்துறையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற டாக்டர்கள் கிடைப்பது இல்லை, துணை மருத்துவ ஊழியர்களே டாக்டர் பணியை பார்ப்பது, மருந்துகளை வழங்குவது போன்றவை நடைபெறக்கூடாது. டாக்டர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களிலேயே வசித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். மயானங்கள் அமைக்க நிலம் தேவைப்பட்டால் உடனடியாக அதற்கான நிலத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும்.

அதேபோல் பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார நிலையங்களுக்கும் நிலம் ஒதுக்க வேண்டும். பொதுமக்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்படம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ராய்ச்சூர், சித்ரதுர்காவில் நடந்த சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது.

கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு மாநகராட்சியில் 4 ஆயிரம் பேருக்கு இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு மீண்டும் தோல் ேநாய் பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. உடனடியாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

கோமாரி நோய் பரவலுக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களின் தோல்வியால் மக்கள் ஏமாற்றம் அடையக்கூடாது. நீங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பணியாற்ற வேண்டும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

4 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். 5-வது உத்தரவாத திட்டமான யுவநிதி திட்டம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தொடங்கப்படும். இந்த திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். விழா அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாமல் இந்த பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். மதவாதிகள் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்படக்கூடாது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகைைய முன்னிட்டு இந்து அமைப்பினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


Next Story