தாய்மொழியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு; பிரதமர் மோடி பேச்சு


தாய்மொழியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு; பிரதமர் மோடி பேச்சு
x

மருத்துவம் மற்றும் தொழிற்படிப்புகளை தாய்மொழிகளில் படிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், சில கட்சிகள் மொழி அரசியல் விளையாட்டில் ஈடுபடு வதாகவும் சிக்பள்ளாப்பூரில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி பெங்களூரு வருகை

பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வருகை தந்தார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். சிக்பள்ளாப்பூரில் உள்ள மறைந்த பொறியாளர் சர்.எம்.விசுவேஸ்வரய்யா நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மதுசூதன் சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

650 மருத்துவ கல்லூரிகள்

நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்பாக 300-க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகளே இருந்தன. தற்போது நாடு முழுவதும் 650 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதனுடன் புதிதாக 150 நர்சிங் கல்லூரிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரை எத்தனை டாக்டர்கள் உருவாகி இருக்கிறார்களோ, அதில் இருந்து இரு மடங்கு டாக்டர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படுவார்கள்.

கர்நாடகத்தில் 70-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது. ஆயுஷ்மான் திட்டம் மூலமாக கர்நாடகத்தில் லட்சக்கணக்கான ஏழை நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்கள், கர்நாடகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இருக்கிறது.

மருத்துவ காப்பீடு திட்டம்

இதன்மூலம் ஏழை, எளிய மக்களின் பணம் மிச்சமாகி வருகிறது. எங்கள் அரசு ஏழைகளின் கஷ்டத்தை போக்க துணை நிற்கிறது. ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டம் மூலமாக இதய நோய், பிற அறுவை சிகிச்சைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு அறுவை சிகிச்சைகளுக்கு ஆன பெரும் செலவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் காணப்படும் ஒரு சவாலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த சவால்கள் காரணமாகவே கிராமங்களை சேர்ந்த ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களால் மருத்துவர்களாக முடியாத நிலை காணப்படுகிறது. அரசியல் சுயநலம், வாக்கு வங்கி அரசியல் உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில அரசியல் கட்சிகள் மொழியை வைத்து கொண்டு அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றன. அந்த மொழியின் வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகள் எதையும் முன்னெடுத்து வைக்கவில்லை.

தாய்மொழியில் மருத்துவம்...

கன்னடம் வளமான மொழி. நமது நாட்டின் பெருமையை அதிகமாக்கும் மொழி கன்னடமாகும். நமது நாட்டை ஆண்ட இதற்கு முந்தைய அரசுகள், மருத்துவம், தொழில் படிப்புகளை கன்னடத்தில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை. கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மற்றும் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் என்ஜினீயர்கள் ஆவதை இந்த அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.

ஏழைகளுக்காக உழைக்கும் எனது தலைமையிலான அரசு கன்னடம் உள்ளிட்ட பிராந்திய தாய்மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழிற் படிப்புகளை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறோம். ஏழைகளை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் அரசியல் நமது நாட்டில் நீண்டகாலமாக நிலைத்திருந்தது. அதை மாற்றிய பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கூட்டு முயற்சியில் ஈடுபட்டால்...

குறைந்த காலத்தில் நமது நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. தலித், ஏழை, எளிய மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி விடுமா? என்று அடிக்கடி கேட்கிறார்கள். பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஏராளமான பணிகளில் ஈடுபட வேண்டி இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட்டால் வளர்ந்த நாடாக இந்தியாவை உயர்த்த முடியும். அதனால் தான் அனைவரையும் பங்காற்றும்படி பா.ஜனதா அரசு வலியுறுத்துகிறது.

இதில், மத நிறுவனங்கள், மடங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க போகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு நேர்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பை பெருக்குவதே மத்திய அரசின் முயற்சி மற்றும் நோக்கமாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தாவர் சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story