பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு..!! - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
புதுடெல்லி,
ஒரு ஆங்கில பத்திரிகையில், அதானி குழுமம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மொரீஷியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட 'எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட்' என்ற நிறுவனம், அதானி குழும நிறுவனங்களில் பிரதானமாக முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்துடன் சேர்ந்து, பெங்களூருவை சேர்ந்த ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளராகவும் உள்ளது.
ரூ.590 கோடி ஒப்பந்தம்
ஆல்பா நிறுவனம், 2003-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), டி.ஆர்.டி.ஓ. ஆகிய முக்கியமான பாதுகாப்புத்துறை நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு, ராணுவ அமைச்சகத்தின் ரூ.590 கோடி ஒப்பந்தத்தை பெற்றது. அது, ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஆகும்.
இந்த தகவல்களை சுட்டிக்காட்டி, மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் புதிய விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தும் ஒப்பந்தம், அதானி மற்றும் சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. 'எலாரா' நிறுவனம் யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?
அடையாளம் தெரியாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் அளிப்பதன் மூலம் நாட்டின் தேச பாதுகாப்பை ஏன் சமரசம் செய்து கொள்கிறீர்கள்? என்று அவர் கூறியுள்ளார்.
பிரியங்கா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியிருப்பதாவது:-
சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு நிறுவனத்துக்கு முக்கியமான 'இஸ்ரோ' ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்த பிரதமர் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஆகியோரும் மத்திய அரசுக்கு கேள்வி விடுத்துள்ளனர்.