எதிர்க்கட்சிகளே! கனவு காணுங்கள்...!! டெர்மினேட்டருக்கே எப்போதும் வெற்றி; பா.ஜ.க.வின் சமூக ஊடக பதிவால் பரபரப்பு

Image Courtesy: India today
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளே கனவு காணுங்கள் என்று பா.ஜ.க. வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
மராட்டியத்தின் மும்பை நகரில் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்களில் எதிர்க்கட்சிகளால் உருவான இந்தியா கூட்டணி சார்பிலான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற கூடிய நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், ஆட்சியை பிடிக்கவும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த சந்திப்பை நடத்துகின்றன. இதற்கு முன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்துள்ள சூழலில், 3-வது கூட்டம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பல முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நோக்கங்களை கேலி செய்யும் வகையில், பா.ஜ.க. தனது சமூக ஊடகத்தில் செய்தியொன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், பிரதமரை தோற்கடித்து விடலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. கனவு காணுங்கள். டெர்மினேட்டரே எப்போதும் வெற்றி பெறுவார் என தெரிவித்து உள்ளது.
அதனுடன், புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தின் பின்புலத்தில் நெருப்பு எரிவது போன்றும், அதில் பிரபல டெர்மினேட்டர் படத்தின் போஸ்டரில், தலை பகுதியில் பிரதமரின் முகம் இருப்பது போன்றும், கையில் துப்பாக்கிக்கு பதிலாக தாமரை பூவை ஏந்தியபடியும் அவர் காட்சி தருகிறார்.
அதன் கீழே தி டெர்மினேட்டர் என்றும் தொடர்ந்து, 2024-ம் ஆண்டில் நான் மீண்டும் வருவேன் என்ற ஆங்கில வாசகமும் காணப்படுகிறது.
மும்பையில் இன்றைய கூட்டத்தில், 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஒன்றாக சந்திக்க இருக்கின்றன. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு மற்றும் கூட்டணிக்கான சின்னம் உள்பட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவுள்ள தேர்தலுக்கான தொகுதி பகிர்வு பற்றியும், நாடு முழுவதும் கூட்டாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது பற்றிய திட்டமிடலுடன் கூடிய பணிகளை செயல்படுத்தும் குழுக்களை உருவாக்குவது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. இந்த பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.