விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!
மத்திய அரசால் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,
மத்திய அரசால் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
முன்னதாக இன்று காலை, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல், என்.சி, தெலுங்கானா ராஷ்திரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஆலோசித்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின், மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
"மோடி அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக இடைவிடாத பழிவாங்கல் நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை குறிவைத்து, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இடைவிடாத பழிவாங்கும் போக்கை மோடி அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.
மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள்(எதிர்க்கட்சிகள்) தீவிரப்படுத்துவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, "அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) போன்ற ஜனநாயக அமைப்புகளை, அவற்றை பயன்படுத்தும் சட்ட வழிமுறைகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது" என்ற பிரச்சினையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதால், மக்களவையை ஒத்திவைக்கும் தீர்மானத்துக்கு காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் நோட்டீஸ் கொடுத்தார். அதேபோல, மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் நோட்டீஸ் கொடுத்தார். அதேபோல, ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் 'ஜீரோ ஹவர் நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.