பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் - பரூக் அப்துல்லா
பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறினார்.
பெங்களூரு,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துகள் எழுந்து வருகின்றன. பா.ஜனதாவை எதிர்த்து ஒன்று சேருவது அல்ல. நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை தன்மை கொண்ட நாடு. இது தான் நான் ஒவ்வொருவருக்கும் கூறும் செய்தி. இந்த தன்மையை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். இது நமது நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும்.
அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை அழைப்பது முக்கியம். காஷ்மீரில் தேர்தல் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெற வேண்டியது முக்கியமானது. காஷ்மீரில் தேர்தலை நடத்த மறுப்பது ஏன்?. அங்கு தேர்தல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. தேர்தல் கட்டாயம் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.
இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. நீங்கள் முஸ்லிமாக இருந்தாலும் சரி, இந்து, கிறிஸ்தவர், சீக்கியராக இருந்தாலும் சரி, கர்நாடக, தமிழ்நாடு, காஷ்மீர், மேற்கு வங்காளம், அசாமை சேர்ந்தவராக இருந்தாலும் சரி நாம் அனைவரும் ஒன்றே. அதனால் இத்தகைய படங்கள் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதை செய்கிறவர்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.