திருவனந்தபுரம் மேயருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் - கேரளாவில் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு


திருவனந்தபுரம் மேயருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் - கேரளாவில் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு
x

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீதான புகார் குறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியாவின் மிகவும் வயது குறைந்த மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன். இந்த மாநகராட்சியின் கீழ் 295 தற்காலிக பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களின் பட்டியலை தருமாறு கேட்டு மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் ஆனாவூர் நாகப்பனுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமீபத்தில் வெளியானது.

இது தொடர்பாக மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த இளைஞர் அமைப்புகளான இளைஞர் காங்கிரசார், பா.ஜ.க. யுவ மோர்ச்சா அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த கடிதத்தை நான் எழுதவில்லை என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் மறுத்து வருகிறார். அப்படியானால் மேயர் எழுதியதாக வெளியான கடிதத்தை யார் எழுதியது? யார் அனுப்பியது? யார் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது? என்பது குறித்தான உண்மை தன்மையினை அறிய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், தற்காலிக பணியாளர்கள் நியமனம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரிடம் பட்டியல் தருமாறு மேயர் ஆர்யா ராஜேந்திரன் கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளுடன் மாமன்ற கூட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதனால், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story