மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்களுடைய முக்கியமான கேள்வி - ராகுல்காந்தி பேட்டி
அதானி பற்றி நான் பேசியதில் ஆட்சேபத்துகுரியது எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் கருத்தரங்கில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாட்டை பற்றி தரக்குறைவாக பேசவில்லை. அதானிக்கு பிரதமர் மோடி எந்தளவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்பதை பற்றி பேசினேன். நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேசியது முழுவதும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதானி பற்றி நான் பேசியதில் ஆட்சேபத்துகுரியது எதுவும் இல்லை. மக்களவையில் பேச வாய்ப்பு கேட்டும் எனக்கு கிடைக்கவில்லை. லண்டனில் பேசியது குறித்து நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
நாடாளுமன்றத்திற்கு இன்று காலை சென்று சபாநாயகரை நேரில் சந்தித்துப் பேசினேன். 4 அமைச்சர்கள் என் மீது குற்றம்சாட்டி இருப்பதால் அதுகுறித்து விளக்கமளிக்க அனுமதி கோரினேன். நாளை எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று நம்புகிறேன்.
மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது தான் என்னுடைய முக்கியமான கேள்வியாக இருக்கும். அரசும், பிரதமரும் அதானி விவகாரத்தைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். அதன் காரணமாகவே அவர்கள் இந்த நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.