நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் 5 கோடி வழக்குகள் - மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ


நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் 5 கோடி வழக்குகள் - மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ
x

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கவலை தெரிவித்து உள்ளார்.

ஆயுதப்படை தீர்ப்பாயம்

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இவ்வாறு ஏராளமான எண்ணிக்கையில் பதிவாகி வரும் வழக்குகளால் கோர்ட்டுகளில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கி வருகின்றன.

அந்தவகையில் சுமார் 5 கோடி வழக்குகள் இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. கீழ் கோர்ட்டுகளில் 4 கோடிக்கு அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 72 ஆயிரத்துக்கு அதிகமான வழக்குகள் இருப்பதாக கூறியது.

இந்த நிலையில் ஆயுதப்படைகளுக்கான தீர்ப்பாயம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ நேற்று உரையாற்றினார். அப்போது நிலுவையில் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக கிரண் ரெஜிஜூ கூறியதாவது:-

5 கோடி வழக்குகள்

இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கி விட்டது.

ஒரு நீதிபதி 50 வழக்குகளை முடித்து வைத்தால், 100 புதிய வழக்குகள் பதிவாகி விடுகின்றன. ஏனெனில் மக்கள் தற்போது அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அதனால் சர்ச்சைகளுக்கு தீர்வு காண கோர்ட்டுகளை அணுகி வருகின்றனர்.

கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.மேலும் மத்தியஸ்தம் தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டம், மாற்று தீர்வு வழிமுறையில் கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.

ஒப்பிடக்கூடாது

இந்திய கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பிற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் நமக்கு வேறு விதமான சிக்கல்கள் உள்ளன.நமது கோர்ட்டுகளில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்க, மொத்த மக்கள் தொகையே 5 கோடி இல்லாத நாடுகளும் உள்ளன.

ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் விரைவாக நீதி வழங்குவதற்கு எந்த உதவியையும் வழங்க சட்ட அமைச்சகம் தயாராக உள்ளது.

இவ்வாறு கிரண் ரெஜிஜூ கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story