இந்தியாவில் தோல் தொற்று நோயால் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி- மத்திய அரசு தகவல்
தோல் தொற்று நோயால் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த சில மாதங்களாக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் தோல் கழலை நோய் அல்லது லம்பி தோல் நோயால் (எல்.எஸ்.டி.) கால்நடைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.
இந்த நிலையில் தோல் தொற்று நோய் பரவ தொடங்கியதில் இருந்து நாட்டில் இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் ஜதீந்திர நாத் ஸ்வைன் கூறுகையில், "பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களில் ராஜஸ்தானில் மட்டும் ஒரு நாளைக்கு 600-700 கால்நடைகள் உயிரிழக்கின்றன. மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் 100க்கும் குறைவாக இந்த எண்ணிக்கை உள்ளது.
கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோயை கட்டுப்படுத்த மாநிலங்கள் தற்போது ஆடு அம்மை தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்த தடுப்பூசி 100 சதவீதம் பயனுள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஏற்கனவே 1.5 கோடி டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போதுமான அளவில் உள்ளது. இரண்டு நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை தயாரித்து வருகின்றன" என தெரிவித்தார்.