மேகாலயா சட்டசபை இடைத்தேர்தலில் 92 சதவீத வாக்குப்பதிவு


மேகாலயா சட்டசபை இடைத்தேர்தலில் 92 சதவீத வாக்குப்பதிவு
x

மேகாலயா மாநிலத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின.

புதுடெல்லி,

மேகாலயா மாநிலத்தில், கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், சோஹியாங் (தனி) தொகுதியில் பிப்ரவரி 20-ந் தேதி, ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹோர்ஜு டோங்குபார் ராய் லிங்டோ மரணம் அடைந்ததால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

அத்தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சாம்லன் மல்கியாங், காங்கிரஸ் வேட்பாளர் ஆஸ்பர்ன் கார்ஜனா, ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சைன்ஷர் லிங்டோ தாபா ஆகிேயாருக்கிடையே நேரடி போட்டி நிலவியது. பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

92 சதவீத வாக்குப்பதிவு

தொடக்கத்தில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 9 மணிக்குள் 26 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணியளவில் 91.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இறுதி வாக்குப்பதிவு சதவீதம், இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

வன்முறை இன்றி அமைதியாக தேர்தல் நடந்தது. 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

பிற இடைத்தேர்தல்கள்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், 50.27 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில், 68.12 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

உத்தரபிரதேச மாநிலம் சான்பி சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 39.51 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

உத்தரபிரதேச மாநிலம் சுயர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், 41.78 சதவீத வாக்குகள் பதிவாகின.


Next Story