ஓயோ நிறுவன தலைவரின் தந்தை 20வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
ஓயோ நிறுவன தலைவரின் தந்தை குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்தார்.
குருகிராம்,
ஆன்லைன் மொபைல் ஆப் மூலம் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனம் ஓயோ. தள்ளுபடி விலையில் தங்கும் அறைகளை வழங்கி ஓயோ நிறுவனம் மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிறுவனத்தின் தலைவர் ரிதேஷ் அகர்வால் (வயது 29). இவருக்கு கீதஞ்ஜா சோட் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால். இதனிடையே ரிதேஷ் தனது மனைவி கீதஞ்ஜா, தந்தை ரமேஷ், தாயாருடன் அரியானாவின் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20-வது மாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரிதேஷின் தந்தை ரமேஷ் நேற்று தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் தான் 20வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ரமேஷ் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷ் 20வது மாடியில் இருந்து எப்படி கீழே விழுந்தார்? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.