கேரளாவில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி இரங்கல்


கேரளாவில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி இரங்கல்
x

கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில், அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றனர். அந்த படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் கடலில் தத்தளித்தபடி அங்கும் இங்குமாக ஆடியது.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த படகு திடீரென தலைக்குப்புற கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில்,

"கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story