பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் மீது நடவடிக்கை -சித்தராமையா உறுதி
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ் வேட்பளார் நசீர் உசேன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை பெங்களூரு விதான சவுதாவில் ஆதரவாளர்கள் கொண்டாடினர். அதில் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்து தீவிரமாக போராட்டத்தை நடத்தியது.
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், "பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நபரை கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். " என்றார்.
இந்தநிலையில் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பெங்களூரு விதான சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இதை பா.ஜனதாவினர் மட்டுமின்றி ஊடகங்களும் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது தொடர்பான குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் தப்ப விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர காவல்துறையும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க போலீசார் 4 தனிப்படை அமைத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கோஷமிட்டவரை அடையாளம் கண்டு, கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.